மதுரையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

மதுரை: மதுரையில் இன்று(ஏப்.,30) மேலும் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரை 84 பேர் பாதித்துள்ள நிலையில், நகரில் மட்டும் 51 பேரை கொரோனா தாக்கியுள்ளது.


இருநாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு பட்டியலில் இன்று மதுரை இடம் பெற்றது. ஒரே நாளில் 5 பேருக்கு பாதிப்பு உறுதியானது. ஒருவர் 42 வயது பெண் சுகாதாரப்பணியாளர். இவர் கொரோனா வார்டில் பணிபுரிந்தவர். சிகிச்சை பெறும் நோயாளிகள் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் கரும்பாலையை சேர்ந்தவர்.

சென்னையில் இருந்து மதுரைக்கு கொரோனா தடுப்பு பணிக்காக வந்த பேரிடர் மீட்பு படை வீரர் ஒருவரும் பாதிக்கப்பட்டார். 26 வயதான இவர் ரிசர்வ் லைன் பகுதி திருமண மண்டபத்தில் தங்கி பணி செய்தார். சென்னையில் இருந்து மதுரை வந்த 90 வீரர்களை சந்தேகத்தில் பரிசோதனை செய்தததில் இவருக்கு தொற்று உறுதியானது.

கரிசல்குளத்தை சேர்ந்த 29 வயது ஆண் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அப்பகுதியில் பாதித்தவர் மூலம் இவருக்கு தொற்றியுள்ளது.


தொற்றியதில் மர்மம்




விளாங்குடியை சேர்ந்த 29 வயது கர்ப்பிணிக்கு நேற்று பரிசோதனை நடந்தது. இதற்கிடையே சமயநல்லுார் அருகே சத்தியமூர்த்தி நகர் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. இதன் பிறகு வந்த பரிசோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது.

இதனால் பிரசவம் பார்த்த மருத்துவக்குழுவினருக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது. சுகாதாரநிலையம் மூடப்பட்டது. குழந்தைக்கு பாதிப்பு இருக்கிறதா என்பதை சில நாட்களுக்கு பிறகு தான் சோதிக்க முடியும்.

பாதிக்கப்பட்ட இன்னொருவர் 33 வயது பெண். அனுப்பானடி அருகே பெருமாள்நாயுடுசந்து பகுதியை சேர்ந்த இவருக்கு யார் மூலம் தொற்று ஏற்பட்டது என தெரியவில்லை.